பக்கம் எண் :

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்ல றேற்றா தவர்.

 

மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - தாம் கருதியவற்றைக் குற்ற மில்லாத சில சொற்களால் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லத் தெரியாதவர்; மன்ற - தேற்றமாக (நிச்சயமாக) ; பல சொல்லக்காமுறுவர் - வீணாகப் பல சொற்களால் விரித்துக் கூற விரும்புவர்.

குற்றங்களாவன:
"குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழுஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை." (நன். பொதுப்பாயிரம், 12).

'மன்ற' தேற்றப்பொரு ளிடைச் சொல்.
"மன்றஎன் கிளவி தேற்றஞ் செய்யும்." (தொல். இடை. 17)