பக்கம் எண் :

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று.

 

எற்று என்று இரங்குவ செய்யற்க-ஐயோ! எத்தன்மையான தவற்றை எண்ணாது செய்து விட்டேன் என்று பின்பு வருந்துவதற் கேதுவான வினைகளை ஒருபோதுஞ் செய்யாதிருக்க; செய்வானேல்-ஒருகால் தப்பித்தவறிச்செய்ய நேர்ந்து விடின்; மற்று அன்ன செய்யாமை நன்று-அதன்பின்பாகிலும் அத்தகைய வினைகளைச் செய்யாதிருப்பது நல்லது.

தவறு செய்வது மாந்தன் இயற்கையே. ஆயின், ஒரு முறை தவறியபின் திருந்திவிடல் வேண்டும். மறுமுறையும் அதே தவறு செய்வது பகுத்தறிவுள்ள மாந்தன் இயல்பிற்கு ஏற்காது. இதையே 'மற்றன்ன செய்யாமை நன்று' என்பதாற் குறித்தார்.

"துணியப்பட்ட தென்று பின் இரங்கப்படும் வினையைச் செய்யாதொழிக; வினை செய்வான் ஆயின், அவை போல்வனவும் செய்யாமையே நல்லது." என்னும் மணக்குடவர் உரை பொருந்துவதே.

பரிமேலழகர் பின்னடிக்குப் 'பின்னிருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று.' என்று பொருள் கூறி, 'பிற்றொடருக்குச் செய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமை நன்றெனப்பிற ரெல்லாம் இயைபற வுரைத்தார்.' என்று பழித்தார் 'எற்றென்றிரங்குவ' என்பதே பின்னிரங்குவதை எதிர் நோக்கலால், இரங்காமை நன்றென்பது முலத்தொடு முரண்படுவதென அறிக. என்னது-எற்று(என்+து).