செய்வினை செய்வான் செயன் முறை-மேற்கூறியவாறு செய்யப்பட வேண்டிய வினையைச் செய்யுமாறு மேற்கொண்டவன் செய்யவேண்டிய முறையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்-அவ்வினையை ஏற்கெனவே செய்து அதன் உள்மருமங்களை அறிந்தவனது கருத்தையறிந்து அதன்படி செய்தலாம். மேற் கூறியவாறென்றது பொருள் முதலிய ஐந்தையும் எண்ணுதலையும் முடிவு முதலிய மூன்றையும் ஆராய்தலையும். 'உள்' ஆகுபெயர். 'உள்ளம்' செயன்முறை பற்றிய கருத்து. அது பிறர்க்குத் தெரியாது அவனுள்ளத்திலிருத்தலால் உள்ளம் எனப்பட்டது. அது வினை வெற்றிக்குக் கையாள வேண்டிய வழிவகை. அதை அறியவே, தானும் அவ்வாறு செய்து வெற்றிபெறுவன் என்பதாம். இம்முக்குறளாலும் ஒத்தோன் வினைசெய்யுத் திறங் கூறப்பட்டது.
|