பக்கம் எண் :

வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றும்
கேட்பினுஞ் சொல்லா விடல்.

 

வேட்பன சொல்லி-பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செய்திகளை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல்-எப்போதும் வினைக்குதவாத வீண் செய்திகளை அவன் கேட்பினும் சொல்லாது விடுக.

இதனால்,

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்."

(200)

என்பது வற்புறுத்தப் பெற்றது. 'வினையில' என்பதனால் வினையுள என்பதும், 'கேட்பினும்' என்பதனால் கேளாவிடினும் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன வினை யென்றது பயன் பாட்டை,'கேட்டல்' சொல்லச் சொல்லுதலும் செவிகொடுத்தலும் ஆகிய இரு செயலும் பற்றியதாம். 'கேட்பினும்' எச்சவும்மை. 'சொல்லா' ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.