பக்கம் எண் :

இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
வொளியோ டொழுகப் படும்

 

இளையர் இனமுறையர் என்று இகழார்-இவர் எமக்கு இளையவர் என்றும், எமக்கு இன்ன முறையினர் என்றும், மதிப்புக் குறைவாகக் கருதாது; நின்ற ஒளியோடு ஒழுகப்படும்- அரசரிடத்து அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு பொருந்த ஒழுகுதல் வேண்டும்.

முன்னறி தெய்வங்களான பெற்றோர் தவிர, வேறெந்த உறவினரும் இனமுறைபற்றி எளிமையாகக் கருதாது, மற்றக் குடிகள் போன்றே அரசரைத் தெய்வமாகப் போற்றவேண்டு மென்பது, தொன்று தொட்ட தமிழ்மரபு. ஆயின், கணவன் உயிர்வாழ்ந்திருக்கும் போது மனைவி அரசாளுதல் தமிழ்மரபன்றாதலின், மேனாட்டு முடிசூட்டு விழாவிற்போல் கணவன் மனைவிக்கு முன் மண்டியிட்டு நின்ற வொளியோ டொழுகல் தமிழகத்தில் இல்லை. ஐம்பூதங்களுள் ஒன்றான தீ தெய்வத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதனாலும், அரசன் துன்பவிருளையும் அகவிருளையும் போக்குவனாதலாலும், அரசனின் தெய்வத்தன்மையை 'ஒளி' என்றார்.

'உறங்கு மாயினும் மன்னவன் றன்னொளி
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்
இறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந்
தறங்கள் வௌவ வதன்புறங் காக்கலார்."


என்று திருத்தக்க தேவருங் கூறுதல் காண்க(சீவக.248).

அரசன் அன்று கொல்லுந் தெய்வமாதலின், அரசரைப்போற்றாதவர் அன்றே அழிக்கப்படுவார் என்பதாம். 'படும்' என்பது இங்கு335-ஆம் குறளிற்போல் 'வேண்டும்' என்னும் பொருளதாம்.

'இகழார்' எதிர்மறை முற்றெச்சம்.