பக்கம் எண் :

நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு.

 

முதுவருள் முந்து கிளவாச் செறிவு -அறிவால் தம்மினும் மிக்கோ ரவையின்கண் அவரினும் முற்பட்டு ஒன்றைச் சொல்லாதிருக்கும் அடக்கம்; நன்று என்றவற்றுள்ளும் நன்றே-அவையிற் பேசுவார்க்கு நல்லதென்று சொல்லப்பட்ட குணங்களெல்லாவற்றுள்ளும் நல்லதே.

முதுவரின் அறிவுமிகையும் தம் அறிவுக் குறைவும், முந்துகிளத்தலால் நேரும் அடக்கமின்மையும் வழுப்படலுமாகிய இருமடிக் குற்றமும்; முந்து கிளவாமையாலுண்டாகும் அடக்கமும் வழுப்படாமையும் ஆகிய இருமடி நன்மையும். எண்ணியடங்கும் அடக்கம் அறிவோடு கூடியதாதலின், அதை ' நன்றென்றவற்றுள்ளும் நன்றே' என்றார். முன்கிளத்தலை விலக்கியமையாலும் , உடன் கிளத்தல் அவையோர்க்குப் பயன்படாமையுஞ் சேர்ந்து மும்மடிக் குற்றந் தங்குமாதலாலும், பின்கிளத்தலே, அதுவும் அவையோர்க்குப் பயன்படினே, நன்றாகும் என்பதாம். ஏகாரம் தேற்றம்.