பக்கம் எண் :

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு.

 

இருபுனலும் -மேல்நீர் கீழ்நீர் எனப்பட்ட இருவகை நீர்வளமும்; வாய்ந்த மலையும் - பலவகையிலும் பயன்படுவதற்கேற்றதாய் வாய்ந்த மலையும் வருபுனலும் - அதனின்று வரும் ஆறும்வல் அரணும் - இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை வலிய அரணும்; நாட்டிற்கு உறுப்பு - சிறந்த நாட்டிற்குரிய உறுப்புக்களாம்.

நிலத்தின் மேலுள்ள ஆற்று நீரும் குளத்து (ஏரி) நீரும் மேல்நீர்; நிலத்தின் கீழுள்ள கிணற்று நீரும் துரவு நீரும் கீழ்நீர். துரவு பெருங்கிணறு. நாட்டிற்கு எல்லையாகவும் அரணாகவும் வளநிலையமாகவும் உதவும் மலையை 'வாய்ந்த மலை' என்றார்.

"அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே."

(நன். பொதுப்பா. 28)

காடும் மலையும் ஆறும் கடலும் இயற்கை யரணாம்; கோட்டையும் அகழியும் செயற்கையரணாம்.