மணிநீரும்-(மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய அகழிநீரும்; மண்ணும்-அதனையடுத்த வெறு நிலமும்; அணிநிழல் காடும்- அதனையடுத்த குளிர்ந்த நிழலுள்ள அழகிய காடும்; மலையும்-அதனையடுத்த பல நீள் மலையும்; உடையது அரண்-தனக்கு முன்னாக முறையே உடையதே சிறந்த மதிலரணாவது. மதிலரண், நீரரண், காட்டரண், மலையரண் என அரண் நால்வகையாகச் சொல்லப்படினும், இங்கு ஆசிரியர் சிறப்பாக அரணென்று எடுத்துக்கொண்டது மதிலரணையே. இதை, 'உடையது அரண்' என்று மணிநீர் முதலிய நான்கையும் அரணுறுப்பாகச் சொல்லியிருப்பதனாலும், அடுத்த குறளாலும் அறிக. அகழிநீர் ஆழமாகவும் என்றும் வற்றாததாகவும் இருந்து கடல்நீரின் நிறத்தைக் கொண்டிருக்குமாதலால் 'மணிநீர்' என்றார். மணி என்பது தொண்வகை ஒளிக்கற்கட்கும் பொதுப்பெயராயினும், சிறப்பாக நீல மணியைக் குறிப்பதை மணிமிடற்றோன் (சிவன்) மணிவண்ணன் (திருமால்) முதலிய பெயர்களால் அறிக. அகழியையடுத்து வெள்ளிடை நிலம் இருப்பது பகைவர் வந்ததை அறிதற் பொருட்டும், அவர் மீது மதில்மிசை மறவர் அம்பெய்தற் பொருட்டும். அதையடுத்த 'அணிநிழற்காடு' பகைவர் தனித் தனியாகவன்றிப் படையாகத் திரண்டு வருவதைத் தடுத்தற் பொருட்டும், பகைவரின் வரவு பார்க்கும் காவல் மறவர் துன்ப மின்றிக் காத்தற் பொருட்டும். இக்காடே மிளையென்றும் காவற் காடென்றும் பெயர் பெறுவது. முல்லைக்கு அப்பாற்பட்டதே குறிஞ்சி. செய்யுளிற் பொழிப்பு மோனை நோக்கி 'மலை' முன்னின்றது. மலை நெய்த லல்லாத் திசையில் நீண்டகன்றுயர்ந்திருப்பன. இவை மேலிருந்து காவல் செய்யவும், கணவாய்களின் வழிவரும் பகைவரைத் தடுக்கவும் கொல்லவும், உதவுவன. வெறுநிலத்தை மருநிலமென்றார் பரிமேலழகர். மரு என்பது மணல் வெளியையும் பாலை நிலத்தையுங் குறிக்கும் வடசொல்லாதலின், இவ்விடத்திற்குப் பொருந்தாது.
|