பக்கம் எண் :

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்.

 

முற்று ஆற்றி முற்றியவரையும்-படைப்பெருமையால் வளைதல் வல்லவராய் வந்து வளைந்த உழிஞையாரையும்; பற்றியார் பற்று ஆற்றி வெல்வது-மதிலரணைப் பற்றிநின்ற நொச்சியார் சிறுபடையினராயினும் தாம் பற்றிய விடத்தைவிட்டு அகலாது நின்று பொருது வெல்வதற்கு இடமானதே; அரண்-சிறந்த கோட்டையரணாம்.

முற்றியவரையும் என்னும் சிறப்பும்மையால் படைப்பெருமை பெறப்பட்டது. அதனால், அதற்கு மறுதலையாகச் சிறியபடையினராயினும் என்பது வருவித்துரைக்கப்பட்டது. ஒரு மாநகர் முழுவதையும் வளைதற்கு மாபெரும்படை வேண்டும். பற்றாற்றுதல் பற்றிய விடத்தில் நின்று பொருதல்; இடவேற்றுமைத்தொகை. 'பற்று' ஆகுபெயர். அரண்சிறப்பால் சிறுபடையும் பெரும்படையை வெல்லும் என்பது கருத்து.

'நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட
வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.'


என்னும் தொல்காப்பிய நெறிமொழிப் படியும் (சொல். 37), உலக வழக்குப்படியும், பெயரெச்சம் இடத்தையும் தழுவுமாதலால், "வெல்வ,தென உடையார் தொழில் அரண்மேனின்றது." என்று கொள்ளத் தேவையில்லை. வெல்லும் அது-வெல்லுமது-வெல்லுவது-வெல்வது. இவ்வெழுகுறளாலும் நல்லரணின் இலக்கணங் கூறப்பட்டது.