அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்-குடிகளிடத்தும் தாம் கொள்ளும் அருளோடும் தம்மிடத்து அவர் கொள்ளும் அன்போடும் பொருந்தி வராத செல்வத்தின் தேட்டத்தை; புல்லார் புரள விடல்-அரசர் மனத்தாலும் பொருந்தாமல் தானே நீங்க விடுக. 'அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்' குடிகளை வருத்தி அளவிறந்து கவர்வது. 'குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலு மாண்பே ' (நீதி.29) குடிகளை வருத்தி அளவிறந்து கவர்வதால், குடிகள் கெடுவதோடு அரசனும் பயனடையான். "அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானு முண்ணான் உலகமுங் கெடுமே. " (புறம்.184) இனி, அமைச்சன் தன் அரசனுக்குத் தீயவழியிற் பொருள் தேடினாலும், பசுமட்கலமும் நீறும்போல அவ்வரசனும் பொருளும் ஒருங்கு கெடுவதாக ஆசிரியர் கூறினமையின், அரசன் தானே தீயவழியிற் பொருள் தேடின் அழிவது திண்ணம் என்பது சொல்லாமலே பெறப்படும். அதனால் புல்லார் என்றதனோடமையாது 'புரளவிடல்' என்றுங் கூறினார். அருளொடும் அன்பொடும் என்று பொதுப்படச் சொல்லியிருப்பதால், அரசனுங் குடிகளும் போன்றே பண்ணையாரும் பண்ணையாட்களும், தொழிற்சாலைத்தலைவரும் தொழிலாளிகளும், முறையே அருளொடும் அன்பொடும் நடந்து கொள்ள வேண்டுமென்பதும் பெறப்படும். தொழில் தலைவர் அருள் கூலிகொடுத்தலிலும் தொழிலாளர் அன்பு பணிசெய்தலிலும், வெளிப்படும். இங்ஙனமே பிறதுறைகளிலும். புல்லார் எதிர்மறை முற்றெச்சம்.
|