அன்பு அறத்திற்கே சார்பு என்ப - அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர்; அறியார் - அவர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. அறம் மறம் என்பன இங்கு நல் வினை தீவினை என்று பொருள்படும் எதிர்ச் சொற்கள். அன்பு மறத்திற்குத் துணை என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது என்பது போல்வது. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்". (158) "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்". (314) என்னுங் குறள்கள் இங்குக் கவனிக்கத்தக்கன. ஒரு பகைவனுக்கு நன்மை செய்தவிடத்து அவன் நாணித் தன் பகைமையைவிட்டு நட்பாவது இயல்பாதலின், "மறத்திற்கு மஃதே துணை" என்றார். ஒருவன் தன் மனைவி மக்கள் மேலுள்ள அன்பினால், அவரைக் காத்தற்குத் தீயவழிகளிலும் பொருள் தேடுதல் உலகத்து நிகழ்தலால், அதனையே மறத்திற்கு மஃதே துணை என்று குறித்தார் என்று உரை கூறுவாருமுளர். அகப்பற்றால் தீமை செய்வது போன்றதே புறப்பற்றால் தீமை செய்வது மாதலானும், தீமைக்குத் துணைசெய்வது அறத்தோடு பொருந்தாமையாலும், அது உரையன்மை அறிக.
|