நட்டல் நகுதல் பொருட்டு அன்று-ஒருவரோடொருவர் நட்புச்செய்வது தாம் கூடிப்பேசிச் சிரித்து மகிழ்வதற்கன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு-இருவருள் ஒருவர் தம் அறிவுக்குறைவால் ஏதேனும் வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை அறிவுநிறைந்த இன்னெருவர் முற்பட்டுக் கடிந்து திருத்தற்பொருட்டே. ஒழுக்க வரம்பிற்கு மிஞ்சியதை 'மிகுதி' யென்றும், அதனாற் கெடுமுன் அல்லது தண்டனையடையுமுன் திருத்தவேண்டுதலின் 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு வயப்படாமையின் 'இடித்தற் பொருட்டு' என்றும், கூறினார். இதனால் நட்பின் நோக்கங் கூறப்பட்டது.
|