குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து- ஒருவனுடைய குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க-நல்லதென்று காணின் அவனொடு நட்புச்செய்க. குணம் என்றது நற்குணத்தை. குடியென்றது சேக்கிழார் குடிபோலும் குடும்பப் பிறப்பை. குற்றம் என்றது தீக்குணத்தை "குணநாடிக் குற்றமும் நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்." (குறள். 504) என்றமையால், குற்றம் பொறுக்கத்தக்க சிற்றளவாயின் பொருட்படுத்தக்கூடாதென்பது கருத்து. சுற்றத் தொடர்புகொண்டவன் நட்புத் தொடர்பிற்கும் ஏற்றவனாயிருப்பனாதலின், இன முடைமையும் வேண்டப்பட்டது. "ஒருமரமுந் தோப்பன்று, ஒரு மகவும் மகவன்று." என்னும் நெறிமுறை பற்றிக் 'குன்றா வினனும்' என்றார். இதனால் ஆராயும்வகை கூறப்பட்டது.
|