அன்பின் வழிவந்த கேண்மையவர்-அன்போடு கூடிப் பழைமையாக வந்த நட்பையுடையார்; அழிவந்த செய்யினும் அன்பு அறார்-தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றைச் செய்தாராயினும் அவர்பால் அன்பு நீங்கார். 'அழி' முதனிலைத் தொழிற்பெயர். 'அழிவா' முதனிலை. உம்மை இழிவு சிறப்பு. இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னார் துறத்தல் தவறுவதோ-துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை."
|