பல நல்ல கற்றல் கடைத்தும் - பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; மாணார்க்கு - சிறவாத பகைவர்க்கு; மனம் நல்லர் ஆகுதல் அரிது - மனந்திருந்தி உண்மை நண்பராகும் தன்மையில்லை. நல்ல நூல்கள் அறிவைப் பெருக்கி மனக்கோட்டந் தீர்க்கும் இலங்கு நூல்கள். "உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல் மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூல் மாண்பு" (நன். பொதுப்பா. 25). கற்றபின்பும் என்று பொருள்படுதலால் எச்சவும்மை. 'மன நல்லர்' எனச் சினைவினை முதல்வினைமேல் நின்றது. நல்லராகுதல் பகைமை நீங்குதல். இனநலமும் கல்விநலமும் மிகப் பெற்றவிடத்தும் தீய பிறவிக்குணம் நீங்காதவர் உலகிலிருத்தலால், 'மன நல்லராகுதல் மாணார்க் கரிது' என்றார்.
|