பக்கம் எண் :

முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும்.

 

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து உள்ளத்தில் எப்போதும் தீயவராகிய வஞ்சகருக்கு; அஞ்சப்படும் - அஞ்சி விலகிக் கொள்ளல் வேண்டும்.

சிரிப்பின் மகிழ்ச்சி பற்றி 'இனிய' என்றும், அகத்திற் பகையிருக்கவும் புறத்தில் நட்புக்காட்டலின் 'வஞ்சர்' என்றும், பகையைக் குறிப்பாற் காட்டக் கூடிய முகமும் அதை அறிய முடியாவாறு மலர்ச்சிகொள்ளுதலின் 'அஞ்சப்படும்' என்றும், கூறினார். நகும் நேரங்களின் பன்மைபற்றி 'இனிய' என்று பன்மையிற் குறித்தார். 'நகாஅ' இசைநிறையளபெடை.