பேதையார் கேண்மை பெரிது இனிது-பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-எங்ஙனமெனின், அவரை விட்டுப் பிரியும்போது ஒரு துன்பமுந் தருவதில்லை. "பேயொடுங் கூடிப் பிரிதலோ வரிதே". "பரீ இ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னு மரீ இப் பின்னைப் பிரிவு." [நாலடி. 220] ஆதலால், பழகினவரை விட்டுப் பிரிதலென்பது பொதுவாகத் துன்பந் தருவதே, ஆயின், பேதையார்நட்பு வரவரத் தேய்ந்துவருதலாலும் யாதொரு நன்மையுஞ் செய்யாமையாலும், அவரை விட்டுப் பிரிதல் எள்ளளவுந் துன்பந் தராததாம்.இதனால், அறிவுடையோர் நட்பாயின்அவர் பிரிவின்கண் பெரிதுந் துன்பம் தருமென்பது,எதிர்நிலை யளவையாற் பெறப்படும் . பேதையாரைப் புகழுவதுபோற் பழித்தலால், இது வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாம் .
|