பக்கம் எண் :

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

 

வெம்துப்பின் வேந்து செறப்பட்டவர்- கடுவலிமையுள்ள பேரரையனாற் சினக்கப்பட்டவர்; யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார்- அவனுக்குத் தப்பி எங்குச் செல்லினும் எங்கும் உயிரோடிரார்.

வெம்மை தீப்போல அழித்துவிடும் கடுமை. வெந்துப்பின் வேந்தனுக்குப் பன்னாட்டிலும் அதிகாரமோ அச்சப்பாடோ சாய்காலோ இருக்குமாதலானும், அவனுக்குத் தப்பியோடியவர் எந்நாட்டுட் புகுந்தாலும் அந்நாட்டரசனால் கொல்லப்படுவதோ வேந்தனிடம் ஒப்புவிக்கப்படுவதோ உறுதியாதலானும்,'யாண்டுச் சென்றியாண்டு முளராகார்' என்றார். 'சென்றும்' என்னும் எச்சவும்மை தொக்கது. 'வேந்து' வேந்தன் என்பதன் மரூஉ. உம்மை முற்றும்மை.