பொருட்பால் உறுப்பியல்-குடி அதிகாரம் 96. குடிமை இனி , அரசியலுறுப்புக்கள் ஏழுள் இறுதியான குடியைப்பற்றிப் பதின்மூன்றதிகாரங்களாற் கூறத் தொடங்கி; முதற்கண் குடிமை கூறுகின்றார். குடிமை அஃதாவது, அரசனுடைய குடிகளுள் அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த சரவடியில் அல்லது குடும்பத்திற் பிறந்தாரது தன்மை. 'சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்' என்னும் முறைமையாலும், பிறருங் கண்டு பின்பற்றற் பொருட்டும், இது முன் வைக்கப்பட்டது. "உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாததாகலின், அச்சிறப்புப் பற்றி இது முன்வைக்கப்பட்டது. என்று வேண்டாதும் முரண்படவும் கூறியுள்ளார் பரிமேலழகர். ஆரியக் குலப்பாகுபாடு தமிழ்ப் பாகுபாட்டின் திரிப்பேயாயினும், நிறத்தை அடிப்படையாகக் கொண்டதும் ஏற்றத்தாழ் வுறுத்தப்பட்டது மாகும். ஆதலால் உயர்குடிப்பிறப்பு நாலாம் வருணத்தானான சூத்திரனுக்கு இருக்க முடியாது. தமிழ்க் குலப்பாகுபாடு கல்வி, காவல், வணிகம், உழவு என்னும் பரந்த தொழிற்பகுப்புப் பற்றிய அந்தணர், அரசர்,வணிகர், வேளாளர், என்னும் நாற்பெரும்பால் அல்லது வகுப்பே யாகும். "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்" என்று (புறம்183) ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் கூறியது இக்கருத்துப்பற்றியே. "கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே." என்று கூறியதும், செல்வத்தாலும் அதிகாரத்தாலும் உயாந்த அரசனும் அவற்றில் தாழ்ந்த அல்லது அவையில்லாத வேளாளன் அல்லது தொழிலாளி மகனான புலவனிடம் அல்லது ஆசிரியனிடம் கற்பது பற்றியே. "தோணி யியக்குவான்" என்னும் நாலடியார்ச் செய்யுளையும் நோக்குக. |