குடிப்பிறந்தார்- உயர்குடிப் பிறந்தவர் அடுக்கியகோடி பெறினும் - பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; குன்றுவ செய்தல் இலர்- தம் ஒழக்கங்குன்றுவதற் கேதுவான இழிசெயல்களைச் செய்யார். செல்வம் பொதுவாகக் காசளவில் மதிக்கப்படுவதனாலும், நன்கொடையாகவுங் கையூட்டாகவுங் கொடுக்கப்பெறுவது பெரும் பாலுங் காசேயாதலாலும், காசுகளில் உயர்ந்தது பொற்காசாதலாலும், இங்குக் கோடி என்பதற்குக் கோடிப் பொன் என்று உரைக்கப்பட்டது. பொன் என்றது உயர்ந்த பொற்காசை. 'கோடி', 'பொன்' என்பன ஆகுபெயர்கள். 'அடுக்கிய கோடி' என்று பொதுப்படச் சொன்னதனால், தாமரை (கோடா கோடி), சங்கம் (பத்துக் கோடா கோடி) பரதம் (இலக்கங் கோடிக்கோடா கோடி) முதலிய மாபேரெண்களெல்லாம் தழுவப்பெறும் உம்மை உயர்வு சிறப்போடு கூடிய எச்சம்.
|