மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்- தனக்குச் சிறப்பாகக் கருதும் மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை யொத்த மானியர்; மானம் வரின் - தமக்குச் சிறப்பாகக் கருதும் மானம் என்னும் உயிர்நாடிப் பண்பு கெடும் நிலை வரின்; உயிர் நீப்பர் - அப்பண்பைக் காத்தற் பொருட்டு வேறொன்றுங் கருதாது உடனே தம் உயிரை விட்டு விடுவர். இங்கு 'மானம்' என்றது மானங் கெடு நிலையை. கவரிமான் மயிர் நீப்பின் வாழாது தன் மானத்தைக் காத்துக்கொள்வதால் மானமா என்பபெறும். மானமாக்கள் போன்றே மானமக்களும் தம் மானங் கெடவரின் உடனே உயிர் நீத்து அதைக் காத்துக்கொள்வர். இஃது, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்ததால் தன் கோல் கோடியபோது, தன் உயிர் துறந்து அதை நேராக்கியது போல்வதாம். "கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் - இடமுடைய வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின்." (நாலடி300 )
|