ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தை வெற்றிபெறச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது. அக்கருமத்திற்குத் துணையாவாரைத் தாழ்ந்து வேண்டித் தம்மொடு சேர்த்துக்கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனி, சால்புடையார் தம் பகைவரைத் தம் துணைவராக மாற்றுதற்குக் கையாளுங் கருவியும் அதுவேயாம். 'ஆற்றல்' ஒன்றைச் செய்து முடிக்கும் திறமை. இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. "பகைசேரு மெண்ணான்கு பற்கொண்டே நன்னா வகைசேர் சுவையருந்து மாபோல் - தொகைசேர் பகைவரிட மெய்யன்பு பாவித் தவராற் சுகமுறுதல் நல்லோர் தொழில். என்னும் செய்யுள் (நீதிவெண்பா, 5) இங்குக் கவனிக்கத் தக்கது.
|