பக்கம் எண் :

நட்பியல்182கலைஞர் உரை

906.

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்

அமையார்தோ ளஞ்சு பவர்.
 

அறிவும்   பண்பும்   இல்லாத   மனைவி,   அழகாக    இருக்கிறாள்
என்பதற்காக   மட்டும்   அவளுக்கு  அடங்கி  நடப்பவர்கள்,  தங்களைத்
தேவாம்சம் படைத்தவர்கள்  என்று கற்பனையாகக்  காட்டிக் கொண்டாலும்,
அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.
 

907.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.
 

ஒரு  பெண்ணின்  காலைச்  சுற்றிக்  கொண்டு  கிடக்கும்  ஒருவனின்
ஆண்மையைக்  காட்டிலும், மான  உணர்வுள்ள ஒருத்தியின்  பெண்மையே
பெருமைக்குரிய தாகும்.
 

908.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங் கொழுகு பவர்.
 

ஒரு  பெண்ணின்  அழகுக்காகவே  அவளிடம்   மயங்கி  அறிவிழந்து
நடப்பவர்கள்,      நண்பர்களைப்பற்றியும்      கவலைப்படமாட்டார்கள்;
நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள்.
 

909.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ணேவல் செய்வார்கண் இல்.
 

ஆணவங்கொண்ட  பெண்கள்  இடுகின்ற   ஆணைகளுக்கு   அடங்கி
இயங்குகின்ற  பெண்பித்தர்களிடம்  அறநெறிச்  செயல்களையோ   சிறந்த
அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
 

910.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
 

சிந்திக்கும்      ஆற்றலும்      நெஞ்சுறுதியும்      கொண்டவர்கள்
காமாந்தகாரர்களாகப்     பெண்களையே     சுற்றிக்கொண்டு     கிடக்க
மாட்டார்கள்.