பக்கம் எண் :

திருக்குறள்191பொருள்

96. குடிமை
 

951.

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.
 

நடுநிலை   தவறாத   பண்பும்,   ஆரவாரமற்ற   அடக்க  உணர்வும்
கொண்டவர்களையல்லாமல்     மற்றவர்களை     உயர்ந்த      குடியில்
பிறந்தவர்களாகக் கருத முடியாது.
 

952.

ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.
 

ஒழுக்கம்,  வாய்மை,  மானம்  ஆகிய  இந்த  மூன்றிலும் நிலைதவறி
நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
 

953.

நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.
 

முகமலர்ச்சி,  ஈகைக்குணம்,  இனியசொல்,  பிறரை  இகழாத  பண்பாடு
ஆகிய  நான்கு சிறப்புகளும்  உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள்
என்று வகைப்படுத்த முடியும்.
 

954.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.
 

பலகோடிப்  பொருள்களை  அடுக்கிக்  கொடுத்தாலும்  சிறந்த குடியில்
பிறந்தவர்கள்  அந்தச்  சிறப்புக்  கெடுவதற்கான   செயல்களுக்கு   இடம்
தரமாட்டார்கள்.
 

955.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பின் தலைப்பிரிதல் இன்று.
 

பழம்   பெருமை   வாய்ந்த   குடியில்   பிறந்தவர்கள்   வறுமையால்
தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.