35. துறவு |
341. | யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் |
| அதனின் அதனின் இலன். |
|
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை. |
342. | வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் |
| ஈண்டியற் பால பல. |
|
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைத் துறந்து விடுவானே யானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும். |
343. | அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் |
| வேண்டிய வெல்லாம் ஒருங்கு. |
|
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப் புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும். |
344. | இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை |
| மயலாகும் மற்றும் பெயர்த்து. |
|
ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும். |
345. | மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் |
| உற்றார்க் குடம்பும் மிகை. |
|
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும் போது,அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக? |