பக்கம் எண் :

116
 

133. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.

(பொ-ள்.)களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்-உவர் நிலத்தில் தோன்றிய உப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும் நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்; கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலை நிலத்து வைக்கப்படும் - ஆதலால், கீழ்க்குடியிற் பிறந்தோராயினும் கற்றறிந்தோரை மேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல் உண்டாகும்.

(க-து.)கல்வி, மாந்தரை உயர்வகுப்பாரினும் மேலவராக மதிக்க வைக்கும்.

(வி-ம்.)"கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமே" என்றார் பிறரும். தேவராகக் கருதச் செய்யும் என்றபடி, தேவர்க்குப் புலவரென ஒரு பெயருண்மையானும். "தேவரனையர் கயவர்"2என்னுங் குறிப்பால் ‘தேவரனையர் புலவர்'3என்னும் அதன் மறை புலப்படுதலானும் இவ்வுண்மை தேறப்படும். பயன் தெரிவோர் என்னுங் கருத்தால் ‘சான்றோர்' என உயர்த்துக் கூறப்பட்டது. கடைநிலம் என்றவிடத்து, நிலம், பிறந்த விடத்தை உணர்த்திற்று, ‘கற்றறிந்தோரை வைக்கப்படும்' என்னும் முடிவு "வஞ்சரை அஞ்சப்படும்"4என்றாற்போல நின்றது.

(3)

134. வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச்செய்வன
விச்சைமற் றல்ல பிற;


1.புறம். 183
2.குறள். 108:3.
3.. நான்மணிக். 75
4.. குறள். 83:4.