கைந்நிலை 1. குறிஞ்சி வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல். 1. நுகர்த லிவருங் கிளிகடி யேன னிகரின் மடமா னெரியு - மம....சாரற் கானக நாடன் கலந்தா னிலனென்று மேனி சிதையும் பசந்து. (சொ-ள்.) நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல் - தினைக்கதிரைத் தின்பதற்காகத் தினைத்தாளின் மேல் ஏறுங் கிளிகளை யோட்டுகின்ற தினைப்புனத்தின்கண், நிகர் இல் மடமான் நெரியும் அமர் சாரல் - ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் விரும்புகின்ற மலைச்சாரலில்; கானக நாடன் கலந்தான் - காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடையவன் என்னைப் புணர்ந்தான்; இலன் என்று - அவ்வாறு புணர்ந்த தலைவன் இஞ்ஞான்று அருகில் இல்லாது பிரிந்தான் என்பதையறிந்து; மேனி பசந்து சிதையும் - என் உடல் பசலை நிறமாகி எழிலழிந்தது, (என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.) (துறை) தொல். கள. சூத். 21. பிரிந்த வழிக்கலங்கினும் என்பதற்கு மேற்கொள். (வி-ம்.) நுகர்தல் - தின்னுதல். இவரும் - ஏறுகின்ற. கடி - ஓட்டுகின்ற. ஒன்றற்கொன்று உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய்க், கன்றும் பிணையும் கலையுமாய்ப் பலவகையாக வரும் மான்கள் என்பதை விளக்க ‘’நிகரில்மடமான்’’ என்றார் நிகரில் என்பது ஒன்றற்கொன்று ஒப்பில்லாத என்ற பொருளைத் தந்தது. நுகர்தல் இவரும் - நுகர்தற்கு இவரும் என நான்கனுருபு விரிக்க. ஏனல் - தினை. இது தினை விளையும் இடத்தை யுணர்த்தியது: ஆகுபெயர். கானக நாடன் என்பது தலைவனையுணர்த்தியது. மலைச்சாரலில் வந்து
|