Primary tabs
கண்ணாய் என்பதற்குப் பொருள் பொருந்தாது. இதனை யாய்ந்து பொருள் காண்பதற்குப் பெரிதும் மனங்கலங்கினேன். தெய்வத்தின் அருளால் ஒன்று புலப்பட்டது. அதனையே வரைந்தேன். 53 ஆம் கவியும் என்னைப் பெரிதும் கலக்க முறுத்திற்று. "அலவன் வழங்கு மடும்பிமி ரெக்கர் நிலவு நெடுங்கானனீடார் துறந்தார், புலவுமீன் குப்பை கவருந் துறைவன், கலவான்கொ றோழி நமக்கு" என்பதுஅது. இதில் "நீடார் துறந்தார்" என்பது யாரை யுணர்த்தும், "துறைவன்" என்பது யாரை யுணர்த்தும், துறைவன் என்பது ஒருமை; நீடார் துறந்தார் என்பது பன்மை; இவ்விரண்டினையும் பொருத்துவதெவ்வாறு? 'கலவான் கொல்' என்று பின் வருகிறது. தோழி என்ற விளியும் தோன்றுகிறது என்று நெடிது ஆய்ந்து ஒருவழி கண்டேன். அதனை அறிஞர் ஆய்ந்தால் வியப்பும் நகைப்பும் விளையும் என்பது என் கருத்து இம்மூன்று மட்டும் அல்ல. எல்லாம் பொருள் காண்பதற்கு அரியனவே. உரையாசிரியர் நோக்கின் உண்மை விளங்கும். இன்னிலை நூற்கவிகள் இதனினும் இடர்ப்பாடு விளைக்கத் தக்கனவே ஆயினும் முன் உரை கண்டது அது. இது உரையே காணாத நூல்; ஆதலிற் கலக்கம் விளைத்தது என்பது கண்டேன். பதினெண் கீழ்க்கணக்கின் இறுதியாக நிற்பவை இவ்விரண்டு நூல்களே. மிகவும் அருமையான நூல்கள். பொருள் காண்பதற்கு எளியனவல்ல அந்நூல்களுள் உள்ள ஒவ்வொரு கவியும். என்னால் வரையப்பட்ட இன்னிலை யுரையும் கைந்நிலையுரையும் நயம்பட்டவுரை யன்றெனினும் இனி நயம்பட விளக்கி யுரை வரைவதற்கு வழிகாட்டியா மென மதித்து மகிழ்வார் கலைவல்ல சான்றோர்
எனக் கருதுகின்றேன்.
இங்ஙனம்
பண்டித வித்துவான்
தி. சங்குப்புலவர்