பக்கம் எண் :

5
ஆசாரக் கோவை
மூலமும் விருத்தியுரையும்
நல்லொழுக்கங்கட்குக் காரணம்

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்

(இதன் பொருள்.) நன்றி அறிதல் - தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும், பொறையுடைமை - பொறுமையும், இன் சொல் ஓடு - இன்சொல்லும், எ உயிர்க்கும் - எல்லா உயிர்க்கும், இன்னாத - துன்பந்தருபவற்றை, செய்யாமை - செய்யாதிருத்தலும், கல்வி ஓடு - கல்வியும், ஒப்புரவு - ஒப்புரவை, ஆற்ற - மிக, அறிதல் - அறிதலும், அறிவுடைமை - அறிவு உடைமையும், நல் இனத்தார் ஓடு - நல்ல இயல்புள்ளவர்களுடன், நட்டல் - நட்புச் செய்தலும், இவை எட்டும் - என்ற இவ்வெட்டு வகையும், சொல்லிய - அறிஞர்களாற் சொல்லப்பட்ட, ஆசார வித்து - ஒழுக்கங்கட்குக் காரணம்.

(பழைய பொழிப்புரை.)தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.

(கருத்துரை.) நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம்.

நன்றி - நன்மை : பண்புப்பெயர். இன்சொல் - இனிமை + சொல். எ + உயிர் - 'எகரவினா முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்' என்ற (நன்னூல் - உயிர் : சூ. 163)