Primary tabs
இந்நூலில் உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் முதலியன பத்தழகுடனே கூறப்பட்டிருக்கின்றன. இன்னின்ன செய்யற்பாலன வென்றும், அவற்றால் இன்னின்ன நலமுண்டாமென்றும், இன்னின்ன செய்யற்பாலன வல்லவென்றும், செய்யின் இன்னின்ன கேடுகளுண்டா மென்றும் இதன்கண் தெள்ளத் தெளிய விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்நூலின்கண் பல பாக்களில் ‘முந்தையோர் கண்ட முறை,' ‘யாவரும் கண்ட நெறி,' ‘பேரறிவாளர் துணிவு' ‘நல்லறிவாளர் துணிவு' என்பன போன்ற தொடர்கள் காணப்படுவது கொண்டு இதன்கண் கூறப்பட்ட ஆசாரங்கள் பேரறிஞர் பலர் தம் அனுபவத்தால் ஆராய்ந்து கண்டவையேயாம் என்பது பெறப்படுவது.
இந்நூலுக்குப் பாளையங்கோட்டை அர்ச் சவேரியர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர், வித்துவான் திருவாளர் பு.சி. புன்னைவனநாத முதலியாரவர்கள் எழுதிய விருத்தியுரையுடன், பழைய பொழிப்புரையுஞ் சேர்த்து இதனை வெளியிடுகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.