எண்ணூல் பயிலாதவன், செய்யும் கணக்கு - இயற்றும்கணக்கு, இன்னா - துன்பமாம் எ-று. வைப்பு - புதைத்து வைப்பது, கண் - கண்ணோட்டமும் ஆம். எண் - கணிதம்; நூலுக்காயிற்று. எண்ணிலான் என்பதற்குச் சூழ்ச்சித் திறனில்லான் என்றும், செய்யுங் கணக்கு என்பதற்குச் செய்யுங்காரியம் என்றும் பொருள் கூறலும் ஆம் . 17. ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா ஈன்றாளை யோம்பா விடல். (ப-ரை.) ஆன்று - கல்வியால் நிறைந்து, அவிந்த - அடங்கிய, சான்றோர் உள் - பெரியோர் நடுவே, பேதை - அறிவில்லாதவன், பகல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மான்று - மயங்கி, இருண்ட போழ்தின் - இருண்டுள்ள காலத்தில், வழங்கல் - வழிச் செல்லுதல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; நோன்று (துன்பங்களைப்) பொறுத்து, அவிந்து - (மனம்) அடங்கி, வாழாதார் - வாழாமாட்டாதவர், நோன்பு - நோற்றல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, ஈன்றாளை - பெற்ற தாயை, ஓம்பாவிடல் - காப்பாற்றாமல் விடுதல், இன்னா துன்பமாம், எ-று. ஆன்று : ஆகல் என்பதன் மரூஉவாகிய ஆல் என்னும் பகுதியடியாகப் பிறந்தது. குணங்களால் நிறைந்து என்று கூறலும் ஆம். அவிந்த - ஐம்புலனும் அடங்கிய; பெரியோர்பாற் பணிந்த என்றுமாம். ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்' என்னும் புறப்பாட்டும்,அதனுரையும் நோக்குக. மான்று - மால் என்பது திரிந்து நின்ற தெனினும் ஆம். பொழுது என்பதன் மரூஉ. ஓம்பா : ஈறு கெட்டது. 18. உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா மனவறி யாளர்1தொடர்பு. (ப-ரை.) உரன் உடையான் - திண்ணிய அறிவுடையவன். உள்ளம் மடிந்து இருத்தல் - மனமடித்திருத்தல், இன்னா - துன்பமாம்; மறன் உடை - வீரமுடைய, ஆள் உடையான் - ஆட்களை
(பாடம்) 1. அகம்வறியாளர்.
|