யுடையான், மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டுதல், இன்னா - துன்பமாம்; சுரம் - அருநெறியாகிய, அரிய - இயங்குதற்கரிய, கானம் - காட்டின் கண், செலவு - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மனம் வறியாளர்- மன வறுமை யுடையாரது, தொடர்பு - சேர்க்கை, இன்னா - துன்பமாம். உரன் - திண்ணிய அறிவாதலை ‘உரனென்னுந் தோட்டியான்' என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரைத்த உரையா னறிக. மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற்காயிற்று. வீரரையுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வேண்டா என்றபடி; வலிதிற் செல்லுதல் எனினும் ஆம். மனவறியாளர் மனநிறை வில்லாதவர்; புல்லிய எண்ணமுடையார் எனினும் ஆம். 19. குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா கலத்தில் குலமில் வழி. (ப-ரை.) குலத்துப் பிறந்தவன் - நற்குடியிற் பிறந்தவன், கல்லாமை - கல்லாதிருத்தல், இன்னா - துன்பமாம்; நிலத்து இட்ட - பூமியில் விதைத்த, நல்வித்து - நல்ல விதைகள், நாறாமை முளையாமற் போதல், இன்னா - துன்பமாம்; நலம் தகையார் தன்மையாகிய அழகினையுடைய மகளிர், நாணாமை - நாணின்றி யொழுகுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, குலம் இல்வழி - ஒவ்வாத குலத்திலே, கலத்தல் - மணஞ் செய்து கலத்தல், இன்னா - துன்பமாம் எ-று. மகளிர்க்கு நாணம் சிறந்ததென்பது ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே' என்னும் தொல்காப்பியத்தானு மறியப்படும். நலத்தகையார் நாணாமை என்பதற்கு நற்குணமுடைய ஆடவர் பழிபாவங்கட்கு அஞ்சாமை எனப் பொருள் கூறுவாருமுளர். மணஞ்செய்வார் ஆராய வேண்டியவற்றுள் குடியொப்புக் காண்டலும் ஒன்று : "கொடுப்பினன் குடைமையும் குடிநிரலுடைமையும், வண்ண முந் துணையும் பொரீஇ யெண்ணா, தெமியேத் துணிந்த வேமஞ்சா லருவினை" என்னுங் குறிஞ்சிப் பாட்டடிகள் ஈண்டு நோக்கற்பாலன. 20. மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா மூரி யெருத்தா லுழவு
|