என்றார்; பேரார்வமுடையார்க்கன்றிக் கேட்ட நற்பொருள்களை உட்கொள்ளுதலும், உள்ளத்தமைத்தலும், பின் சிந்தித்துத் தெளிதலும், தெளிந்தவழி நிற்றலுங்கூடாமையினென்க. ‘ஆற்றவும் நல்லவை' என முடிப்பாரு முளர். பேதுறார் : ஒருசொல் லெனினுமாம். இது பஃறொடை வெண்பா. 9. தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே பங்கமில் செய்கையராகிப் பரிந்துயார்க்கும் அன்புடைய ராதல் இனிது. (ப-ரை.) தங்கண் - தங்குமிடத்தே, அமர்பு உடையார் நட்புடையார், வாழ்தல் - (செல்வமுடையராய்) வாழ்தல், முன் இனிது - மிக வினிது ; அம் கண் விசும்பின் - அழகிய இடமகன்ற வானத்தில் அகல் நிலா - விரிந்த நிலாவை, காண்பு - காணுதல், இனிது -; பங்கம் இல் செய்கையர் ஆகி - குற்றமில்லாத நடையுடையவராய், யார்க்கும் பரிந்து - யாவர்க்கும் இரங்கி, அன்புடையர் ஆதல் - அன்புடைய ராயிருத்தல்,இனிது-. தம்மை யடுத்து ஒட்டி வாழ்பவர் நன்மைகளைப்பெற்று வாழ்தல், தம் பெருமிதத்திற்கு கேதுவாகலின், ‘தங்க ணமர் புடையார் தாம் வாழ்தல் முன்னினிதே 'எனவும் , அழகுந் தன்மையுமுடைத்தாய் விழிக்கு விருந்து செய்தலின், ‘அகனிலாக் காண்பினிதே 'எனவும். ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம்' (குறள் - 77) என்றிருத்தலின், ‘யார்க்கு மன்புடைய ராத லினிது' எனவுங்கூறினாரென்க. தாம் : அசை. 10. கடமுண்டு வாழாமை காண்டல்இனிதே நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல் எனைமாண்புந் தான்இனிது நன்கு. (ப-ரை.) கடம் உண்டு - கடன் கொண்டு உண்டு, வாழாமை காண்டல் - வாழாதிருத்தல், இனிது-; நிறை மாண்பு இல் - கற்பு
|