27

26. நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்.

(ப-ரை.) நச்சி - (ஒரு பொருளைப் பெற) விரும்பி, தன் சென்றார் - தன்னை அடைந்தவரது, நசை - விருப்பம், கொல்லா - அழுங்குவியாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; உட்கு - மதிப்பு, இல்வழி - இல்லாத விடத்து, வாழா - வாழாமைக் கேதுவாகிய, ஊக்கம் - மனவெழுச்சி, மிக இனிது-; எத்திறத்தானும் - எப்படியாயினும், இயைவ - (பிறர்க்குக்) கொடுக்கக் கூடியவற்றை , கரவாத - ஒளிக்காத, பற்றினின் - அன்பினும், பாங்கு இனியது இல் - நன்றாகவினியது வேறொன் றில்லை.

‘தன் நச்சி ' எனக் கூட்டுவாரு முளர். ‘ செல்லுதல்' ஈண்டு அடைதல். நசை கொல்லலாவது ஒன்றைப் பெறலாமென்ற ஆசை நாளடைவிற் றேய்ந்து அழியுமாறு செய்தல் ; அஃதாவது கொடுத்தற்கிசைவில்லையாயின் உடனே மறாது பன்முறையும் தருவதாகப் பொய்கூறி நாளடைவில் அவ்வாசை தானே அழியுமாறு செய்தல்.அஃது அப்பொருட்டாதலை,

"இசையா ஒரு பொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத்து இயற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து

(நாலடி- 111)

என்னும் பாவா னறிக.

உட்கு - உள்குதல் , நினைத்தல் ; ஈண்டு மதித்தல்.

"இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின்

(நாலடி- 94)

என்றிருத்தலின் ‘எத்திறத்தானு மியைவ கரவாத' என்றார். பற்று -இல்வாழ்க்கையுமாம்.

27. தானங் கொடுப்பான் தகையாண்மைமுன்இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது.