‘கையிகந்து' என்பதூஉம் பாடம் ; ‘கயவரைக் கையிகந்து வாழ்தல்'என்றார் பிறரும "மனத்தான் மறுவில ரேனுந் தாஞ்சேர்ந்த இனத்தல் இகழப் படுவார்" (நாலடி - 180) ஆகலின், ‘கயவரைக் கைகழிந்து வாழ்த லினிதே' என்றார். தன்னை ‘நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும்' தானேயாமாகலின், அது செய்தற்கு மனங்கிளர்தல் நன்றென்பார், ‘உயர்வுள்ளி யூக்கம் பிறத்த லினிதே ' என்றார். இனி, ‘உயர்வுள்ளி' என்பதற்குத் ‘தான் இருக்கும் உயர்ந்த பதவியை நினைத்து எனவும் பொருள் கூறுப. ஒளிபட வாழ்தல் ஈண்டு அதற்குக் காரணமாய ஈதலையுணர்த்தி நின்றது. என்னை? ‘ஈதலிசைபட வாழ்தல் என்றிருத்தலினென்க. எனவே, ‘இகழ்ந்துரையாராகி, யொளிபட வாழ்தல்' என்பதற்கு ‘நன்கு மதித்து இனியவை கூறி ஈதல் 'என்பது பொருளாயிற்று. "இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளு ளுவப்ப துடைத்து" (குறள் - 1507) என்றார் திருக்குறளாசிரியரும். 30. நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத நன்றியின் நன்கினியது இல். (ப-ரை.) நன்றி பயன் - (ஒருவன் செய்த) நன்றியின் பயனை, தூக்கி - கருதி, வாழ்தல் - வாழ்வது, இனிது - மன்றம் கொடும்பாடு உரையாத - நியாய சபையின்கண் ஓரஞ்சொல்லாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; அன்று - (தன்கண் வைத்த) அந்நாள், அறிவார் யார் என்று -அறிவாரொருவரு மிலரென்று, அடைக்கலம் - அடைக்கலப் பொருளை, வௌவாத -அபகரியாத, நன்றியின் - நன்மையினும், நன்கு இனியது - மிக வினியது, இல் -பிறிதொன்றில்லை. "செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ " (புறம் 34) என்றிருத்தலின், ‘நன்றிப் பயன் றூக்கி வாழ்த னனியினிதே ' என்றார்.
|