"நெடும்பகற் கற்ற அவையத் துதவாது உடைந்துளார் உட்குவருங் கல்வி - கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே தீதென்று நீப்பரி தால்" என்னும் நீதிநெறிவிளக்கச் செய்யுள் ஈண்டறியத்தக்கது. ஏர் : உவமவுருபு ; ‘தணிகை வெற்பேரும்' என்றார் பெரியாரும். ‘ஏர்' என்பதற்கு ‘அழகு' எனப்பொருள் கோடலுமொன்று. மகளிர் சொல் இனிதாதலைத் ‘தேன் மொழியார்' என்னும் பெயரானு மறிக.சிலப்பதிகார முடையார், "பாகுபொதி பவளந் திறந்து நிலா உதவிய நாகிள முத்தி னகைநலங் காட்டி" என்றமையும் அப் பொருளை வற்புறுத்து மென்க. தெற்ற இனிதாதலாவது, மிகவினிதாதல். 2. உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்இனிது நான்கு. (ப-ரை.) உடையான் - பொருளுடையானது, வழக்கு - ஈகை, இனிது -; ஒப்ப முடிந்தால் - மனைவி யுள்ளமுங் கணவனுள்ளமும் (மாறுபாடின்றி) ஒன்றுபடக் கூடுமாயின். மனை வாழ்க்கை - இல்வாழ்க்கையானது, முன் இனிது - முற்பட வினிது ; மாணாதாம் ஆயின் - (அங்ஙனம்) மாட்சிமைப்படா தெனின், நிலையாமை நோக்கி - (யாக்கை முதலியன) நில்லாமையை ஆராய்ந்து, நெடியார் - தாமதியாதவராய், துறத்தல் - (அகம் புறமாகிய இருவகைப் பற்றுகளையும்) விடுதல், தலையாக நன்கு இனிது - தலைப்பட மிக வினிது. ஒப்பமுடிதலின அருமை தோன்ற ‘ஒப்ப முடிந்தால்'என்றார். "காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித் தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டும் ஒன்றையே காண்" என நன்னெறியும்,
|