8

"மருவிய காதல் மனையாளுந் தானும்
இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ்
செல்லாது தெற்றிற்று நின்று "

என அறநெறிச்சாரமும் கூறுதல் காண்க.

மனைவாழ்க்கை ஏனைய துறவற வாழ்க்கையைக் காட்டிலும்இனிதாதலை,

"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"

(குறள்- 46)

எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் கூறினார். துறத்தல் (புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய உடம்பின்கண்ணும் உளதாய பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி) விடுதல் நெடியார் - (செல்லற்குக் காலம்) நீட்டியாதவராய் ; இதுமுற்றெச்சம் இஃது இப்பொருட்டாதலை,

"இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றஞ்
செல்வம் வலியென்று இவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாமுய்யக் கொண்டு "

என்னும் நாலடிச் செய்யுள் வலியுறுத்தும்.

‘தலையாகத் துறத்தல் ' என முடித்து, ‘தலைப்பட்டார் தீரத்துறந்தார் என்பதற் கொப்பத் ‘(தாம்) தலைப்படுமாறு துறத்தல் ' எனப் பொருளுரைப்பாரு முளர்.

3. ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

(ப-ரை.) ஏவது மாறா - ஏவலை மறாது செய்யும், இளங்கிளைமை - மக்களுடைமை, முன்இனிது - முற்பட வினிது ; நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய், நாளும் கற்றல் - நாடோறுங் கற்றல், மிக இனிது -; ஏர் உடையான் - (தனதென) உழுமாடுகளையுடையானது, வேளாண்மை - பயிர்த்தொழில், இனிது -; ஆங்கு - அதுபோல , தேரின் - ஆராயின், திசைக்கு - (தான் செல்லுந் திசையில், கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல், இனிது -