எங்கும் எய்என எழுபகை இன்மையால்- (அம் மன்னனுக்கு) எவ்விடத்திலும் விரைந்து எழுகின்ற பகைவர்கள் இல்லாமையால்; மொய் பொறா தினவு உறு- போர்த் தொழிலே பெறாமையால் தினவு கொண்டனவான; முழவுத் தோளினான்- மத்தளம் போன்ற திரண்ட தோள்களை உடைய அவ்வரசன்; வையகம் முழுவதும் - உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும்; வறிஞன் ஓம்பும் ஓர் செய்என- வறியவன் தனக்குள்ள ஒரே வயலைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது போல; காத்து. இனிது அரசுசெய்கின்றான்- பாதுகாத்து இனிமையான ஆட்சிசெய்து வருகிறான். மொய்பெறா: போர் செய்தல் இல்லாமையால் தோள்கள் தினவுறுதல் இயற்கை. தோளுக்கு ‘முழவு திரட்சியால் உவமை ஆயிற்று. பெறா: பெறாத ஈறு கெட்ட எதிர் மறைப்பெயரெச்சம். ஓம்புதல்: காத்தல்; உறு தோள்: வினைத்தொகை. ‘எய் என’ என்பதற்கு அம்புகளை எய்யுங்கள் என்று சொல்லும்படி எழுகின்ற பகை எனவும் பொருள் கூறுவர். |