எம் குலத்தலைவர்கள்-எமது சூரிய குலத்தலைவர்கள் எல்லோரும்; இரவிதன்னினும் - தமது குல முதல்வனான சூரியனை விடவும்; தம்குலம் விளங்குற - தங்கள் குலம் விளக்க முறும்படியாக; தரணிதாங்கினார்- இவ்வுலகை ஆதரித்துக் காத்தனர்; மங்குநர் இல்என- புகழில் மயங்கியவர்கள் இல்லை என்னுமாறு; வரம்பில் வையகம் - எல்லைகாண இயலாத இவ்வுலகத்தை; இங்கு நின் அருளினால்- இங்கு. இவ்வயோத்தியிலிருந்தே உனது அருளின் உதவியால்; இனிதின் ஓம்பினேன்- இனிமையுறக் காத்து வந்தேன். தலைவர்கள்: குடிமக்களுக்குத் தலைமை பூண்டவர்களான அரசர்கள் சூரியன் எங்கும் வெப்பத்தையும். ஒளியையும் பரப்பி. உயிர்களைக் காப்பது போல. சூரிய குலவேந்தர்கள் அச்சூரியனைக்காட்டிலும் சிறப்பாகத் தமது குலத்தை விளங்கச் செய்தனர் என்பது கருத்து. மங்குதல்: அழிதல். குறைதல் என்னும் பொருள் உடையது. இங்கு ‘மங்குநர்’ புகழில் குறைந்தவர் என்னும் பொருளில் வந்தது. தரணி. ‘வையகம்’ இரண்டும் உலகம் என்ற பொருள் உடையன. ‘மங்குநர்’ என்பதிலுள்ள ‘நர்’ பெயர் விகுதி. ‘வையகம்’ வையம் எனவும் வழங்கப்பெறும். 2 |