பற்று அவா வேரொடும் பசை அற- உலகப் பொருள்களில் பற்றியுள்ள ஆசை வேரொடு பற்றற்றுப் போகவும்; பிறவி போய் முற்ற - அவ்வாசையின் பயனாய் வரும் பிறவி நோய் சென்று முடியவும்; வால் உணர்வு மேல் - மெய்யுணர்வு பெற்ற; முடுகினார் அறிவு - விரைந்து சென்று அடைகின்ற ஞானிகளின் ஆன்மஞானம்; சென்று உற்றவானவன் - சென்று அடைகின்ற இறைவனாகிய சிவபெருமானே; இருந்து யோகு செய்தனன் எனில் - இங்கிருந்து யோகத்தைச் செய்தான் என்றால்; இதன் தூய்மை சொற்றலாம் அளவதோ - இதன் தூய்மை சொல்லத் தக்க அளவுடையதாகுமோ? ஆகாது. அவா வேரொடும் பசையறுதல்: ஆசை வேருடன் பற்றறுதல். போய் முற்றல்: முற்றிப் போதல். வால் உணவு: மெய்யறிவு. யோகு: யோகம் (கடைக்குறை). அளவது; அளவுடையது. சிவபெருமான் ஆன்ம ஞானிகளுக்குத் தலைவன் என்றபடி. உலகப் பொருள்களின் மீதுள்ள பற்று ஒழிந்தால் - அந்தப் பற்றுக் காரணமாக வரும் பிறவிதீரும் - பிறவி நீங்க ஆன்ம ஞானம் உண்டாகும். அந்த ஞானத்தால் இறைக்காட்சி பெறலாம் என்பதால் ‘’வாலுணர்வு மேல்வர முடுகினார் அறிவு சென்றுற்ற வானவன்’’ எனச் சிவபெருமானைச் சிறப்பித்துக் கூறினார். அவன் இருந்து தவம்செய்த இடமாதலின் இதன் தூய்மை சொல்ல இயலாததென்றார். 3 |