வாச நாள் மலரோன் அன்ன மாமுனி - மணம் பொருந்திய அன்றலர்ந்த தாமரை மலரில் இருக்கும் பிரமனுக்கு ஒப்பாகிய தவமுனிவனாகிய விசுவாமித்திரனுடைய; பணி மறாத - கட்டளையை மறுக்காத; காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் - மணிகள் பொருந்தியதும் பொன்னால் அமைந்ததுமாகிய பசிய அணிகலன்களை அணிந்துள்ள காகுத்தனாகிய இராமனது; கன்னிப் போரில் - இவ்விளம்போரில் (முதல் போர்); வாள் அரக்கர் தங்கள் குலத்து - வாள்முதலிய படைக்கலங்களைக் கொண்ட அரக்கர் குலத்தினரது; உயிர் குடிக்க அஞ்சி - உயிரை உண்பதற்குப் பயந்து; கூசி ஆசையால் உழலும் கூற்றும் - இதுவரை நடுங்கி. (ஆனால்) ஆசையால் திரிந்து கொண்டிருந்த எமனும்; சுவை சிறிது அறிந்தது . கொஞ்சம் ருசி தெரிந்து கொண்டான். நாண்மலர்: அன்றலர்ந்த மலர். மலரோன்: பிரமதேவன் பிரமனைப் போல மன்னுயிர் அடங்கலும் படைப்பேன் எனத்தொடங்கிய முனிவனாதலின் பிரமனை உவமை கூறினாரென்க. பணி: கட்டளை. மறாத: மறுக்காத (எதிர் மறைப் பெயரெச்சம்). காசு: மணி. உலாம்: உலாவும் என்பதன் இடைக்குறை (பொருந்தும்). பசுமை+பூண்: பைம்பூண். காகுத்தன்: காகுந்தன் மரபில் தோன்றியவன் (இராமன்). இந்திரன் காளையாகிச் சுமக்க - அரக்கர்களை வென்று இந்திரனுடைய ஆட்சியை மீட்டுக் கொடுத்த சூரியகுலத்து மன்னன்; இவன் பெயர் புரஞ்சயன் என்பது. காகுத்தன் என்பது இந்திரனாகிய காளையின் பிடரில் நின்றவன் என்னும் பொருள் உடையதாகும். கன்னிப்போர்; இளம்போர். இராவணனுக்கு அஞ்சி - அரக்கர் உயிர் உண்ண ஆசையிருந்தும் உண்ண இயலாத எமன் - இராமனது கன்னிப்போரில் சிறிது சுவை அறிந்தான் என்பது கருத்து. 54 |