பக்கம் எண் :

180அயோத்தியா காண்டம்

ஆகின்’ என்பதில் உம்மை தொக்கது. விடையும் கொண்டேன் - விரைவு
பற்றி இறந்த காலத்தால்கூறப்பட்டது;  கால வழுவமைதி.             114

இராமன் கோசலையின் மாளிகை புகுதல்  

1605.என்று கொண்டு இனைய கூறி,
     அடி இணை இறைஞ்சி, மீட்டும்,
தன் துணைத் தாதை பாதம் அத்
     திசை நோக்கித் தாழ்ந்து,
பொன் திணி போதினாளும்,
     பூமியும், புலம்பி நைய,
குன்றினும் உயர்ந்த தோளான்
     கோசலை கோயில் புக்கான்.

     குன்றினும் உயர்ந்த தோளான் - மலையினும் சிறந்த
தோள்களையுடைய இராமபிரான்;என்று  கொண்டு இனைய கூறி -
என்று விடைகொண்டு இத்தகையவற்றைச் சொல்லி; மீட்டும் அடி இணை
இறைஞ்சி -
மீண்டும் கைகேயியின் கால்களில் விழுந்து வணங்கி;  தன்
தந்தை துணைப் பாதம் -
தன் தகப்பனாராகிய தயரதன் அடியிணையை;
அத் திசைநோக்கிதாழ்ந்து - அத்திக்கு நோக்கி வணக்கம் செய்து;
பொன்திணி போதினாளும் -பொற்றாமைரைப் பூவில் வீற்றிருக்கும்
திருமடந்தையும்; பூமியும் - மண்மடந்தையும்; புலம்பி நைய - தனிமைத்
துயரால்  வருந்தி அழ; கோசலை கோயில் புக்கான் -(அங்கிருந்து
புறப்பட்டுக்) கோசலையின் மாளிகையைச் சேர்ந்தான்.

     பெரியோர்களைக் கண்டவுடன் வணங்குவதேயன்றிப் பிரியும்போதும்
வணங்குதல் முறையாகலின்,இராமன் கைகேயியை மீண்டும் வணங்கிச்
சென்றான். தந்தையைக் காண முடியாமையின் அவன் இருக்கும்திசை
நோக்கி வணங்கினான். தான் வனம் செல்வதனைத் தெரிவிக்கவும், அதனால்
தயரதனுக்குஉண்டாகும் பிரிவுத் துயரைத் துடைக்குமாறு  வேண்டவும் தன்
தாய் கோசலை இல்லம் சென்றான்என்க. புலம்பு - தனிமை.  புக்கான் -
‘புகு’ என்னும் பகுதி இரட்டித்துக் காலங்காட்டிற்று.                  115