பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 311

     மூவரையும் வாழ்த்தினர் என இயைக்க - தெய்வங்களை வழுத்தினார்
என இயைக்க. தானாக முன்வந்து  வனம் செல்லும் இளையோனை
வழுத்தினர் அல்லது  ஏத்தினர் எனல் சிறப்பு.                      233

மூவரும் தேர் ஏறிச் சேறல்  

1839.அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின்,
முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா,
தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப்
பொன்னும், தானும், ஓர் தேர்மிசைப் போயினான்.

     அன்ன தாயர் - அத்தகைய தாய்மார்கள்; அரிதின் - சிரமப்பட்டு;
பிரிந்த பின் - பிரிந்து சென்ற பிறகு;  முன்னர்  நின்ற முனிவனைக்
கைதொழா -
முன்னே நின்ற வசிட்ட  முனிவனைக் கைகூட்பி வணங்கி;
தன்னது  ஆர் உயிர்த் தம்பியும்- தன்னுடைய  அரிய உயிர் போலச்
சிறந்த தம்பியாகிய இலக்குவனும்;  தாமரைப்பொன்னும் - தாமரையில்
வீற்றிருக்கும் திருமகளாய சீதையும்;  தானும் - ஓர்தேர்மிசைப்
போயினான்
- ஒரு தேர்மேல் ஏறிச்சென்றான்.

     தனது - தன்னது  விரித்தல் விகாரம் எதுகை நோக்கியது.  பொன் -
திருமகள்,  இங்கேசீதை.                                       234