பக்கம் எண் :

மந்திரப் படலம் 51

                                     தயரதன் நல்ல நாள் பார்த்தல்

1398. அரசவை விடுத்தபின், ஆணை மன்னவன்,
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான்
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு, ஒரு
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான்.

     அரசவை விடுத்த பின் - அரசர் கூட்டத்தை அனுப்பிய பின்பு;
ஆணை மன்னவன்- ஆணையைச் செலுத்தும் தயரத மன்னன்;  புரைதபு
நாளொடு பொழுது -
குற்றமற்ற நாளொடு கூடியமுகூர்த்தத்தை; 
நோக்குவான் - பார்ப்பதற்கு; உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு -
சோதிட நூலாராய்ச்சியுடைய சோதிடரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு;
வரை பொரு மண்டபம்மருங்கு - மலையை ஒத்த மண்டபத்தில்; 
போயினான் - போய்ப் புகுந்தான்.

     சோதிடம் பார்க்க அமைதியான சூழல் வேண்டுமாதலின்,  சோதிடம்
வல்லாரோடும் தனியிடம்சென்றான். உரை - ஆகுபெயர்;  சோதிட நூலைக்
குறித்தது.                                               85