(மந்திரக் கிழவர்கள்) ஆலோசனைக்குரிய சூழ்ச்சியோடு; விரைவின் வந்து- விரைந்துஅரசவைக்கு வந்து; ஈண்டினர் - நெருங்கி; பரியும் நெஞ்சினர் பரதனை வணங்கினர்- அன்பினால் இரங்கும் மனம் உடையவராய்ப் பரதனை வணங்கினார்கள். மேற் படலத்து இறுதிச் செய்யுளில் (2243.) ‘மந்திரக்கிழவர்’ என்பதனை இங்குத் தொடர்க. ‘விரகு’ என்பது இங்கு ஆலோசனை. இனி, நடக்கவேண்டியசெய்திபற்றிய ஆலோசிப்போடு வந்தார்கள் என அறிக. ‘பரிதல்’ துன்பச் சூழலில் பரதன் அரசுஏற்க நேர்ந்துள்ள இக்கட்டான நிலையால் மனம் கசிந்து இரங்கலாம். மந்திரக் கிழவர்பரதனினும் மூத்தோர் ஆயினும் இப்போது பரதன் சக்கரவர்த்தி ஆதலின் ‘வணங்கினர்’ என்க. ‘அருமறை முனிவன்’ என்பதனுள் ‘அருமறை’ பெயரடை ஆதலின் கூறியது கூறுல் ஆகாமை உணர்க. 2245. | மந்திரக் கிழவரும், நகர மாந்தரும், தந்திரத் தலைவரும், தரணி பாலரும், அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும், சந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார். |
அந்தர முனிவரோடு- ஆகாய வழியில் இயங்கவல்ல முனிவர்களோடு; மந்திரக் கிழவரும் - மந்திராலோசனைக்குஉரிமை உடைய அமைச்சர்களும்; நகர மாந்தரும் - நகரத்தில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாய் உள்ளவர்களும்; தந்திரத் தலைவரும் - சேனைத் தலைவர்களும்; தரணிபாலரும் - அரசர்களும்; அறிஞர் யாவரும் - அவ்வத் துறையில் முறைபோகிய வல்லார்களும்ஆகிய அனைவரும்; சுந்தரக் குரிசிலை - அழகிற் சிறந்த பரதனை; மரபின் -அவரவர்க் குள்ள வரிசை முறையின்படி; சுற்றினார் - (நெருங்கிச்) சூழ்ந்து கொண்டார்கள். ‘அறிஞர் யாவரும்’ என்பதனை “அன்ன மாநிலத் தறிஞர் தம்மொடும்’ (2243) என்பதனுடன்ஒப்புநோக்குக. அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர், சாரணர் என்னும் ஐம்பெருங்குழுவின் உள்ளாரை இங்கு மந்திரக் கிழவர், தந்திரத் தலைவர் என்று குறிப்பிட்டார் என்க. புரோகிதர் - வசிட்டன் முதலிய ஆசாரியர். தூதுவர், சாரணர் என்பார் அமைச்சருள் அடங்குவர்.என்பேராயத்துள்ளும் ஒருசிலர் மந்திராலோசனைக் குரியர். “கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், நளிபடைத்தலைவர், யானைவீரர், இவுளி மறவர்இனையர் எண் பேராயம் என்ப’ என்னும் அரசச் சுற்றத்தினருள் நகர மாந்தர் என்பார் காண்க. இதனைச் சிலம்பு ‘ஐம்பெருங் குழுவும் எண்பேராயமொடு........ அரசுவிளங்கு அவையம் முறையின்புகுதர” (சிலப். வஞ்சிக். 26.38 - 47) எனக் கூறுமாறு காண்க. மந்திராலோசனைச் சபையில் அவரவர் தகுதிக்கும் பதவிக்கும் ஏற்ப அமர்தற்குரிய இடங்கள் முறைப்படி வரையறுக்கப்படும்.ஆதலின், ‘மரபின்’ என்று ஒரு சொல் அமைத்தார். மன்னராட்சியாயினும் மக்கள் ஆட்சிஎன்னும்படி அக்கால அரசு முறைகள் நடந்தன. ஆதலின், ‘நகர மாந்தர்களும்’ ஆலோசனைச் சபையில் இடம்பெற்றனர் எனக் கருதலாம். 2 |