கழனி நாடு ஒரீஇ- வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு நீங்கி; தாவர சங்கமம் என்னும் தன்மையயாவையும் - நிலைத்திணை; இயங்கு திணை என இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்; இரங்கிட - (தன் நிலை கண்டு) வருந்த; கங்கை எய்தினான் -கங்கைக் கரையை அடைந்தான். பூ - பொலிவு என்றும் ஆம். அரசகுமாரன் மரவுரி தரித்துத்துயரக் கோலத்தோடு வருதல் கண்டு மனம் தாளாமல் எல்லா உயிர்களும் இரங்கின. ஏழு வகையானஉயிர் வர்க்கங்களைத் தாவரம், சங்கமம் என்ற இரண்டில் அடக்கினார். ஒரே இடத்தில்நிலையாக இருப்பன நிலைத்திணையாகிய மரம், செடி முதலிய தாவரங்களாம். இடம் விட்டுப்பெயர்ந்து செல்லும் தன்மை படைத்த ஊர்வன. நீர் வாழ்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் முதலியவை இயங்கு திணையாகிய சங்கமம் ஆகும். கம்பர் தம்முடைய நாடாகிய சோழநாட்டைக் கோசல நாட்டுக்கு உவமையாக்கினார். உவமைபொருளினும்உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது இலக்கணம். “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”(தொல். பொருள். உவம. 3) என்பதனால் இங்குக் கோசல நாட்டினும் சோழ நாடு உயர்ந்தது என்றாயிற்று இங்ஙனம் தம் நாட்டை மீக்கூறியது கம்பரது தாய்நாட்டுப் பற்றைக் காட்டும். சோழநாடு போலவே கோசல நாட்டிலும் பயிரில்லாத வெற்றிடம் இல்லை என்பதாம். கங்கைக் கரை அடைந்த சேனையின் சிறப்பும் மிகுதியும் 2304. | எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது, கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால், உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே. |
கண் அகன் - இடம் அகன்ற; பெரும் புனல் - மிக்க நீரை உடைய; கங்கை - கங்கையாறு; அண்ணல் - பெருமையுடைய; வெங்கரி - கொடிய யானைகளின்; மதத்து அருவி - மத நீர்ப் பெருக்காகிய அருவி; எங்கணும் பாய்தலால் - எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; எண்ண அரும் சுரும்பு தம் இனத்துக்கல்லது - கணக்கிட முடியாத வண்டுக் கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); உண்ணவும் - குடிக்கவும்; குடையவும் - குளித்து மூழ்கவும்; உரித்தன்று ஆயது - உரிமையுடையதல்லாததாக ஆயிற்று. கங்கை நீரினும் யானைகளின் மதநீர்ப் பெருக்கு மிகுதி என்றதாம். எனவே, யானைகளின்மிகுதி கூறியவாறு. வண்டுகள் மதநீரிற் படிந்து குடைந்து உண்ணும் இயல்பின ஆதலின் அவற்றுக்குஇப்போது கங்கை நீர் உரியதாயிற்று. மதம் பிடித்த யானையின் உடல் வெப்பம் அதிகமாகஇருக்கும் ஆதலின், வெம்மையுடைய கரி என்றும் பொருள்படும். ‘ஏ’ காரம்ஈற்றசை. 2 |