பக்கம் எண் :

சூர்ப்பணகைப் படலம் 141

மணமுடிக்குமாறு வேண்டினாள். அதனால் சற்றும் பயன் பெறாமல்
அவர்களால் விரட்டப்பட்டாள். இவ்வாறு ஏமாற்றமுற்ற சூர்ப்பணகை
அவர்களை அழிக்கக் கரனுடன் வருவதாக அச்சுறுத்திச் சென்றாள். இதுவே
இப் படலச் செய்தி.

     காப்பியப் போக்கில் நல்லதோர் திருப்பம் ஏற்படும் வலுவான
கட்டமிது. முன்னர் இராமன் முடியிழக்கக் கைகேயி என்ற பெண்
காரணமானது போன்று இப்போது மனைவியைப் பறி கொடுக்க மற்றோர்
பெண் காரணமாவதை மிகச் சிறந்த முறையில் காட்டும் படலம் இது.
இராமன் சூர்ப்பணகை உரையாடல் 'கம்ப நாடகம்' என்ற பெயரமைவதற்குத்
தக்க சான்றாக அமைந்துள்ளது. சூர்ப்பணகையின் வடிவ மாற்றம், எண்ணப்
போக்கு, உரையாடும் திறம், ஆசைப்பட்டவனை அடையாததால் அடையும்
ஏமாற்ற நிலை, புலம்பும் பெற்றி, உறுப்பிழந்த நிலையில் இடும் ஓலம்
உதவிக்கு அழைக்கும் அவலம், மீட்டும் மீட்டும் தான் கொண்ட முயற்சியில்
தளராமை, ஏதும் பயனற்ற நிலையில் சினத்தீ பொங்க அழிவுக்கு வழி
காணல் ஆகியவை இப்படலத்தின் சிறப்புக்குச் சான்றாம். காப்பியத்
திருப்பத்திற்கு நல்லதோர் அடித்தளமாக அமைகிறது இப்பகுதி எனலாம்.

கோதாவரியின் பொலிவு

அறுசீர் ஆசிரிய விருத்தம்

2732. புவியினுக்கு அணிஆய், ஆன்ற பொருள்
     தந்து, புலத்திற்று ஆகி
அவி அகத் துறைகள் தாங்கி,
     ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென்
     ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதாவரியினை
     வீரர் கண்டார்.

    புவியினுக்கு அணியாய் - பூமிக்கு ஓர் அணிகலன் போன்று
அழகூட்டுவதாய் அமைந்து; ஆன்ற பொருள் தந்து - சிறந்த
பொருள்களைக் கொடுத்து; புலத்திற்று ஆகி - வயல்களுக்குப்
பயன்படுவதாக ஆகி; அவி அகத்துறைகள் தாங்கி - தன்னுள் அமைந்த
பல நீர்த் துறைகளைக் கொண்டு; ஐந்திணை நெறி அளாவி - குறிஞ்சி
முல்லை பாலை மருதம் நெய்தல் எனும் ஐந்து நிலப்பகுதி வழிகளில் பரவிச்
சென்று; சவி உறத் தெளிந்து - செவ்வையாய் தெளிவுடையதாகி;
தண்ணென் ஒழுக்கமும் தழுவி - குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய்;
சான்றோர் கவியென(க்)கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் -
கல்வியில் நிறைந்த பெரியோரின் செய்யுள் போல் விளங்கிய கோதாவரி
எனும் ஆற்றை இராமலக்குவராம் வீரர்கள் பார்த்தனர்.

     இனி, சான்றோர் கவியைக் குறிக்குமிடத்து; புவியினுக்கு அணியாய் -
உலக மக்களுக்குப் பல அலங்காரமாகி; ஆன்ற பொருள் தந்து - சிறந்த