வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது, கரனை உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கிறேன் எனக் கூறுவதும் சூர்ப்பணகையின் பொய் நிலையைக் காட்டும் எனலுமாம். இவளைத் தாடகை போல் கொல்லாமல் விட்டதற்குக் காரணம் கரன் முதல் இராவணன் குலத்தை அழிக்கும் நோக்கமே எனக் குறிப்புப் பொருள் காண்பர். இப்படலம் முழுதும் 'கம்ப நாடகம்' என்ற பெயர்க்கு ஏற்பப் பொருத்தமான உரையாடல்கள் செவ்விய நிலையில் அமைந்துள்ளன. 143 |