'பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நிற்றியோ இளையோய்' என வைதேகி வைத வார்த்தையை மனத்தில் தேக்கி, இலக்குவன் இராமபிரானைத் தேடிச் சென்றான். தமையனைக் கண்டு தான் வந்த காரணத்தைச் சொன்னான். இருவரும் சீதை இருந்த பர்ண சாலை நோக்கி விரைந்து வந்தனர். உடல் இருக்க உயிர் பிரிந்தது போல் பர்ணசாலை இருந்த இடத்தையும் சானகி இல்லாமையையும் கண்டனர். இருவரும் அவளைத் தேடிச் சென்றனர். அவ்வழியில் கொடி, வில், கவசம் முதலியன விழுந்து கிடத்தல் கண்டு, அதைத் தொடர்ந்து சென்று இறுதியில் சடாயு விழுந்து கிடந்த இடம் வந்தனர். இராமன் பலவாறு புலம்புதலைக் கேட்ட குற்றுயிராகக் கிடந்த சடாயு நடந்ததையெல்லாம் ஒருவாறு கூறி உயிர் நீத்தான். இராமன் சோகம் மிகக்கொண்டு புலம்பினான். அவனை இலக்குவன் தேற்றினான். இறுதியில் இராமன் சடாயுவுக்கு நீர்க்கடன் செய்து முடித்த போது சூரியன் மறைந்தத. இவையே இப்படலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஆகும். சானகியைக் கவர்ந்து செல்லும் இராவணனைச் சடாயு எதிர்த்தல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3403. | என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு அடா போவது?' என்னா, 'நில் நில்' என்று, இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்; மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும் பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; |
என்னும் அவ்வேலையின்கண் - என்று (சீதை) சொல்லிய அந்தச் சமயத்தில்; எங்கு அடா போவது - எங்கே அடா (என்னைத் தப்பி நீ) போவது; என்னா - என்று; நில்நில் என்று இடித்த சொல்லன் - நில் நில் என்று இடியோசை போல் ஒலிக்கும் உரத்த சொற்களை உடையவனும்; நெருப்பு இடைபரப்பும் கண்ணன் - சினத் தீயைத் தம்மிடம் பரவச் செய்த கண்களை உடையவனும்; மின் என விளங்கும் வீரத்துண்டத்தன் - மின்னலைப் போல் (ஒளி) விளங்கும் வீரவலி பொருந்திய அலகை உடையவனும்; மேரு என்னும் பொன் நெடுங்குன்றம் - மேரு என்று கூறுகிற பொன்னால் ஆகிய பெரிய குன்று; வானில் வருவதே பொருவும் மெய்யான் - வானத்தில் பறந்து வருவது போன்ற (பேருடம்பினை) உடையவனும் - ஆகிய ("எருவையின் மன்னன்" என்ற 6ஆம் பாடலில் பொருள் முடிக்க). இப்பாடலில் சடாயுவின் கண், அலகு, மேருமலை போன்ற உடம்பு ஆகியவை கூறப்பட்டன. என்னும் அவ்வேலையின் கண் என்பது, முன் படல இறுதிப் பாடற் கருத்தை உட்கொண்டு கூறியது. இப்பாடல் முதல் வரும் ஆறு பாடல்கள் பல பாட்டு ஒருவினை கொள்ளும் குளகம். வேலை - வேளை, சொல்லன், கண்ணன், துண்டத்தன், மெய்யான் என்னும் குறிப்பு |