இராமன் பலவாறு வருந்தித் துன்பம் கொண்டதை நீக்க உதித்தவன் போல் கதிரவன் உதித்தான். ஏதுத் தற்குறிப்பேற்ற அணி. இப்படலத்தில் விப்ரலம்பசிருங்காரச் சுவை மிகுந்துள்ளது. இராமன் இலக்குவனிடம் கொண்ட உளமொன்றிய அன்பையும், சீதையிடம் கொண்ட உயிர் ஒன்றாகிய செயிர் தீர் காதலையும், இப்படலவழி உணர்ந்து மகிழலாம். இருள் நீங்கி ஒளி பரவிய நிலையில் இப்படல அமைப்பு அமைந்துள்ள நுட்பத்தை எண்ணி உணர்க. பன்னுதல் - பலமுறை கூறல் ஈடு - வலிமை. இதனை, ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை வாசிப்பாடு அழியாத மனத்தினான் (5170) என்ற காட்சிப் படலப் பாடலிலும் காணலாம். அல்குதல் - சுருங்குதல், மெலிதல். 101 | 3642. | 'நிலம் பொறை இலது' என, நிமிர்ந்த கற்பினாள், நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய, அலம்புறு பறவையும் அழுவவாம் எனப் புலம்புறு விடியலில், கடிது போயினார். |
நிலம் பொறை இலது என - இந்த நிலவுலகம் பொறுமை உள்ளதன்று என்று கூறும்படி; நிமிர்ந்த கற்பினாள் - உயர்ந்த கற்பினை உடையவளாகிய; பொறை நலம் கூர்தரும் - பொறுமைப் பண்பு மிக்குடைய; மயிலை - மயில் போன்ற சாயலை உடைய சீதையை; நாடிய - தேடி; அலம்புறு பறவையும் - அலைதலைக் கொண்ட பறவைகளும்; அழுவவாம் என - அழுகின்றன என்று கூறும்படியாக; புலம்புறு விடியலில் - (அப்பறவைகள்) ஒலிக்கிற விடியல் காலத்தில்; கடிது போயினார் - விரைவாகச் (சீதையைத்) தேடிப் போனார்கள். விடியலில் பறவைகள் ஒலி எழுப்புவது சீதையைத் தேடி அவளைக் காணாமல் அவை அழுவன போன்ற என்றார். தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினும் பொறுமை உடையள் அந்நிலத்துத் தோன்றிய சீதை என்றபடி. அலம்புறு பறவை - அலைதலைக் கொண்ட பறவை. மயில் - உவமையாகு பெயர். இப்படலத்தில் சீதையைத் தேடல், இலக்குவனைத் தேடல் என்ற இருவகைத் தேடல்களும், சீதையைப் பிரிந்த அவலம், இலக்குவனைப் பிரிந்த அவலம் என்ற இருவகை அவலங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இரட்டை நிலையை உணர்ந்து தெளிக. 102 |